460. மும்பை வன்முறையின் பின்விளைவுகள்
நேற்று எழுதிய பதிவில் சொன்னபடி, போலீசார் நவநிர்மாண் சேனா குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதில், இன்று மும்பையில் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிகிறது. இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லை. மேலும், அவரை கைது செய்தால் மும்பையில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றூ மகாராட்டிர அரசு பயந்தது போல, (ராஜ் தாக்கரேக்கு பொது மக்களிடையே ஆதரவு இல்லாததால்!) இன்று எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே தேர்வு எழுத வந்த வடக்கிந்திய இளைஞர்கள் மீது நேற்று MNS குண்டர்கள் நிகழ்த்திய வன்முறையில், ஒரு பிகாரி இளைஞர் இறந்து போனார். அதன் தொடர்ச்சியாக, மும்பையிலிருந்து பாட்னாவுக்கு திரும்பி வந்த மற்ற இளைஞர்கள், ரயில்வே நிலையத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். பிரிவினைவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இது போல சங்கிலித் தொடராக பல வன்முறை நிகழ்வுகள் ஏற்படக்கூடிய அபாயத்தை என் நேற்றைய பதிவில் சுட்டியிருந்தேன். நல்ல வேளை, வட இந்தியாவில் வேறெங்கிலும் கலாட்டா எதுவும் இல்லை!
ஒரு நல்ல செய்தியையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. அலகாபாத் மற்றும் பாட்னாவில் வசிக்கும் வட இந்தியர்கள், "காந்திகிரி" (அகிம்சை) வழியை பின்பற்ற முடிவு செய்து, அங்கு வசிக்கும் மராத்தியர்களுக்கும், அங்கிருந்து மும்பைசெல்லும் ரயில்களில் பயணம் செய்யும் மராத்தியர்களுக்கும், பூவும் இனிப்புகளும் தந்து, தாங்கள் ஒற்றுமையையும், அமைதியையும் விழைவதாகக் கூறி நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்துள்ளனர் !
எ.அ.பாலா
1 மறுமொழிகள்:
Test comment !
Post a Comment